பாடல் பிறந்த கதை

நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்

இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தேவ ஊழியரான, பில்லி கிரகாம் அவர்கள், தன்னுடைய கூட்டங்களின் முடிவில், ஆத்துமாக்களை இரட்சிப்புக்கென்று அழைக்கும் போது இந்தப் பாடலை பாடி அழைப்பது வழக்கம்.

இந்தப் பாடலை எழுதியவர் சார்லட் எலியாட் (Charlotte Elliot) என்னும் அம்மையார் ஆவார். அவர் தனது 30 வயது வரை மிகவும், சந்தோஷமாய், எதைக் குறித்தும் கவலையில்லாதவராக, உற்சாகமானவராய், பாடிப் பறக்கும் பறவையைப் போல வாழ்ந்து வந்தார். அவர் 30 வயதை தாண்டிய போது, அவருக்கு ஒரு வியாதி வந்தது. அது அவரை படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியாதபடி, அந்தப் பறவையின் காலை ஒடித்துப் போட்டதுப் போல படுக்கை கிடையாக்கிப் போட்டது.

அந்த அம்மையார் மனம் ஒடிந்துப் போனார்கள். தேவன் மேலும் உலகத்தில் உள்ள யாவர் மேலும் அவர்களுக்கு கோபம் வந்தது. சுயபரிதாபம் அவர்களை ஆட்கொண்டது. அப்பொழுது அவருடைய தகப்பனார், தங்கள் குடும்ப உறவினரும் கர்த்தருடைய ஊழியரும் பாடகருமான டாக்டர், சீசர் மலான் (Dr. Caesar Malan) என்னும் ஊழியரை தங்களது வீட்டிற்கு அழைத்தார். அவர் வந்துப் பேசினால் மகளுடைய இருதயம் மாறும் என்று நினைத்தார். அதுப்போல, அந்த டாக்டரும் வந்து சார்லட்டிடம் பேசிய போது, அவர்கள் தன் இருதயத்திலுள்ள வெறுப்பை எடுத்துக் கொட்டினார்கள். தேவனைப் பற்றிக் குறை கூறினார்கள். அதைக் கேட்ட அந்த டாக்டர், ‘நீங்கள் மிகவும் களைத்து இருக்கிறீர்கள், வெறுப்பையும், கோபத்தையும் உள்ளடக்கி, சோர்ந்துப் போயிருக்கிறீர்கள்’ என்றுச் சொன்னார். அப்போது, சார்லட், ‘நான் சந்தோஷத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னச் செய்ய வேண்டும் என்றுக் கேட்டார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும்’ என்றார். அப்போது அவர்கள், ‘நான் என்வாழ்வில் சில காரியங்கள் சரிசெய்ய வேண்டி உள்ளது. அவற்றை சரிசெய்தப் பிறகு நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்Ï என்றுக் கூறினார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள், அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். மட்டுமல்ல, உங்கள் வெறுப்பு, கோபத்திற்கு பதிலாக, சந்தோஷத்தையும் சமாதானத்தையம் தருவார்’ என்றுக் கூறினார்.

அப்போதே அந்த அம்மையார், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அந்த நாளில்தானே இரட்சிக்கப்பட்டார்கள்.
அன்றிலிருந்து அந்த நாளை தனது ஆவிக்குரிய பிறந்தநாள் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடினர்கள்.

பதினான்கு வருடங்கள் கழித்து, அவருடைய சகோதரன் ஒரு போதகராக இருந்தவர், அவர் ஏழையான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, ஒரு பள்ளியை ஆரம்பிக்க விழைந்தார். ஆனால், அவருக்கு போதிய பண உதவி இல்லாததால், என்ன செய்வது என்று சார்லட்டிடம் கேட்டபோது, அவர்கள் ஒரு பாடலை எழுதி அதை வைத்து, நிதியை திரட்டலாம் என்றுக் கூறினார்கள். அப்போது அந்த சீசர் மலான் என்ற டாக்டர் சொன்ன ‘இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள்’ என்றுச் சொன்ன வார்த்தைகளை, ஞாபகத்தில் வைத்து, இந்தப் பாடலை எழுதி, அதன் மூலம் பணத்தை திரட்டி, அந்தப் பள்ளியைக் கட்டினார்கள்.

சார்லட் தன் வியாதியிலிருந்து கடைசி வரை சுகமடையவில்லை என்றாலும், கடைசி வரை வீட்டிலேயே சிறைப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய இருதயம் தன் சிருஷ்டிகராகிய கர்த்தரை நித்தமும் துதித்து, அவர்கள், தன் தேவனிடத்தில் நேசத்தை வைத்திருந்தபடியால், 150 பாடல்களை இயற்றினார்கள். அவை ஆங்கில கிறிஸ்தவ வரலாற்றில், ஒரு எழுப்புதலை உருவாக்கிற்று என்பது உண்மை.

தங்கள் பெலவீனத்திலும் கர்த்தருக்கென்று பாடல்களை இயற்றி பாடிய அந்தக் கவிக்குயில், தனது 82ஆவது வயதில், நித்தியமான சுகத்தோடு, பெலவீனங்கள் மாறி தான் நேசித்த தேவனோடு என்றென்றும் வாழும்படி பறந்துச் சென்றது. ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அல்லேலூயா!

நான் பாவிதான் மெய்யாயினும் சீர் நேர்மை செல்வம் மோட்சமும் உம்மாலே பெற்று வாழவும் என் மீட்பரே, வந்தேன் வந்தேன்

அந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு! சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டத்தைப்போல, “பிரசங்கியார் இதோ வந்துகொண்டே இருக்கிறார்!” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தாயிற்று. இப்போது கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது? பாடுவதற்கு சிறப்புப் பாடல் கைப்பிரதியும் அச்சடிக்கவில்லை.

சமயோசித புத்தியுள்ள போதகர் மேடையில் எழுந்து வந்தார். “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த சில பாடல்களைப் பாடுவோம்.” என்று கூறி, “மகிழ்வோம், மகிழ்வோம்….” எனப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தினரும் உற்சாகமாக இருகரம்தட்டி உற்சாகமாய்ப் பாடினர். அதைத்தொடர்ந்து, “அல்லேலூயா கர்த்தரையே, ஏகமாகத் துதியுங்கள்,” மற்றும், “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்,” “பரிசுத்தர் கூட்டம் நடுவில்,” “ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் !” எனப் பாடல்கள் முழங்கின. செய்தியாளர் தாமதமாய் வந்த குறையை, ‘அப்பாடல் நேரம்’ நிறைவாக்கிற்று.

இப்படி, கிறிஸ்தவத் தமிழ் உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை, எல்லோருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்து, எல்லோராலும் உற்சாகமாய்ப் பாடப்படும் பல பாடல்களை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குனர், சகோதரர் எமில் ஜெபசிங் ஆவார். இந்திய தேசத்தின் மிகச் சிறந்த மிஷனரி இயக்கமாகத் திகழும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை வித்திட்டு, உரமிட்டு, வளர்த்திட்ட ஆதிகாலத் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறுமளவிற்கு, இவ்வியக்க மக்கள் உற்சாகமாய்ப் பாட வழிவகுத்தவர். அழிந்து போகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம், இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான ராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.

“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் ! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் ! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் !” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது.

இப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.

மத்தேயு 11:28
பாடல் : F.J. செல்லத்துரை

ராகம் : F.J. செல்லத்துரை.


சென்னை மெரினா கடற்கரை!

கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் அறிவர் D.G.S.தினகரன் !

இசைக்குழு மென்மையாய் இசைக்க, தனக்கு விருப்பமான இப்பாடலை இனிமையான குரலில் பாடுகிறார். தேற்றரவாளனாகிய து}ய ஆவியானவரின் பிரசன்னம் மைதானத்தை நிரப்புகிறது. ஆறுதலும், அற்புத சுகமும் ஆண்டவரிடமிருந்து அநேகர் பெற்று நன்றியுடன் தோத்தரிக்கின்றனர் !

உலகின் பல நாடுகளில், பல பட்டணங்களில் வல்லமை நிறைந்த அற்புத ஊழியத்தை தேவ பெலத்துடன் செய்துவரும் சகோதரர் தினகரனின் நற்செய்திப் பணிக்கு, அவர் தெரிந்து கொண்ட தலைப்பு, “இயேசு அழைக்கிறார்” ஊழியங்கள் !.

ஆம்! தேவ ஆசீர்வாதம் நிரம்பிய இவ்வூழியங்களுக்குப் பெயர் கொடுத்த இப்பாடலை சகோதரர் தினகரனே அவரது நற்செய்திக் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். இப்பாடலைக் கேட்கும் எவரும் சகோதரர் தினகரனையும் அவரது அற்புத ஆறுதல் ஊழியங்களையும் நினைவுகூருமளவிற்கு, இப்பாடல் அவரோடு ஒன்றிவிட்டது. எனவே, அவரோடு இவ்வாறு நெருக்கமாக இணைந்த இப்பாடலை இயற்றியது அவரே என அநேகர் எண்ணியதில் வியப்பொன்றுமில்லை. இதினால், சகோதரர் தினகரனே இப்பாடலாசிரியரைத் தன் நற்செய்திக் கூட்டங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் கு.து. செல்லத்துரை ஆவார். இவர் ஜோதி-சைமன் தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லு}ரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார்.

சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். திருச்சபை மறுமலர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார். 02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு. குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார்.

மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன்;, மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றவர். நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்;ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார்.

சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்கைதத் தொடர்ந்தார். 1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைதத் தந்தார். ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார். அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். அன்றுமுதல் இப்பாடல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், அற்புத சுகத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொடுத்து வருகிறது.

பாடல் : வே. மாசிலாமணி
சங்கீதம் 95: 1,2
ராகம் : வே. மாசிலாமணி


பல்லவி

தந்தானைத் துதிப்போமே; திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

இந்துப் பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்தின் மூன்று சகோதரர்களும், தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, திருச்சபையைக் கட்டும் போதகர்களாக, முழுநேரப்பணியில் ஈடுபட்டார்கள் என்பது வியக்கத்தக்கதல்லவா? இப்படிப்பட்ட குடும்பத்தின் மூத்த சகோதரராக விளங்கியவரே வே. மாசிலாமணி ஐயராவார். அவரது இளைய தம்பி வே. சந்தியாகு ஐயரும், சிறந்த பாடலாசிரியர் மற்றும் இசை வல்லுனர் என்பதை நாம் அறிவோம்.

மாசிலாமணி ஐயர் திருப்புவனம் என்ற சிற்று}ரின் போதகராகப் பணியாற்றிய நாட்களில், இந்தக் கும்மிப்பாடலை எழுதினார். ஆண்டவரின் புகழை, அனைவரும் அறியும் வண்ணம், அவரைப் போற்றிப் பாட, திருச்சபையாகிய கன்னியரை அழைப்பதாக, இப்பாடலை மாசிலாமணி எழுதியிருக்கிறார். சிறந்த வயலின் வித்துவானாகிய மாசிலாமணி, தனது பாடல் மற்றும் இசைத் தாலந்துகளை, நற்செய்திப் பணிக்கென முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டார்.

திருவண்ணாமலையின் வாரச் சந்தை நாட்களில், மாசிலாமணி தன் நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவார். அப்போது அவரின் பாடலையும் இசையையும் கேட்க, சந்தைக்கு வந்த மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களுக்கு நற்செய்தியைப் பக்குவமாகப் பாடல்கள் வழியாக அவர் எடுத்துக்கூறி, ஆண்டவரின் அன்பால் அவர்களைக் கவர்ந்திடுவார்.

மாசிலாமணி எழுதிய “ஆர் இவர் ஆராரோ” என்ற கிறிஸ்மஸ் பாடலும், “வந்தனம் வந்தனமே”, மற்றும் “ஆனந்தமே ஜெயா ஜெயா” என்ற புத்தாண்டுப் பாடல்களும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பண்டிகைகளின் மகிழ்ச்சியைக் கூட்டித் தரும் பிரபலமான பாடல்களாக விளங்குகின்றன. கருத்துச் செறிவுடன் விளங்கும் இப்பாடல்கள், நு}ற்றாண்டு காலமாய், திருச்சபை மக்களனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் பிரபலமாவதற்கு, அவர் அமைத்த சிறந்த இசைப்பண்களும் காரணமாகும். இசையும் பாடலின் சொல்லடுக்கும், அருமையாக இணைந்து வருவதை, “ஆனந்தமே ஜெயா ஜெயா,” என்ற பாடலைப் பாடி மகிழ்வோர் நன்கு அறிவர்.

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
.....................

DME படிப்பை வெற்றியுடன் முடித்து, தன் விடுமுறை நாட்களைக் கழிக்கத் தன் அக்கா வீட்டிற்குச் சென்றான், 20-வயது நிரம்பிய வாலிபன் மைக்கேல். அக்காவின் கணவர் மறைத்திரு. D. Williams பட்டுக்கோட்டை CSI ஆலயப் போதகர். அந்நாட்களில் பிரதரன் அசெம்பிளி ஊழியர்கள் பாண்டிச்சேரியிலிருந்து அங்கு வந்து உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். மிஷினரி ஜான் கொடுத்த தேவசெய்தியின் மூலம் ஆவியானவர் பேச, 18.9.1969 அன்று மைக்கேல் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.

பின்னர் மைக்கேல் வேலையிலமர்ந்த போது, ஆண்டவரின் அழைப்பைத் தன் உள்ளத்தில் உணர்ந்தார். எனவே, அவருடைய ஊழியம் செய்ய, 1971-ம் ஆண்டு இந்திய இல்லந்தோறும் நற்செய்தி இயக்கத்தில் முழுநேரப் பணியாளனாகச் சேர்ந்தார். 1972-ம் ஆண்டு இவ்வியக்கத்தின் முன்னோடி மிஷனரியாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஹரூர் சென்றார். அங்கிருந்த சிலோன் இந்தியப்பொது மிஷன் ஆலயத்தை மையமாகக் கொண்டு இல்லந்தோறும் நற்செய்தியை அறிவித்தார்.

அந்நாட்களில் அத்திருச்சபையின் ஞாயிறுபள்ளிப் பொறுப்பும் மைக்கேலிடம் கொடுக்கபப்பட்டது. அந்த ஞாயிறு பள்ளிப் பிள்ளைகள் உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர்களுக்குத்தான் அறிந்த பாடல்களைக் கற்றுக் கொடுக்க முயன்றார். ஆனால் அவையனைத்தும் அப்பிள்ளைகளுக்கு முன்னரே தெரிந்திருந்தது. எனவே, அப்பிள்ளைகளை உற்சாகப்படுத்த, புதுப்பாடல்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.

இந்நிலையில் தனது இரட்சிப்பின் அனுபவத்தையே தன் சாட்சிப் பாடலாகவும், அப்பிள்ளைகளுக்கு சவால் அழைப்பாகவும் இருக்க எண்ணி, இப்பாடலை இயற்றினார்.

பிள்ளைகள் புரிந்து பாடக்கூடிய எளிய நடையில் எழுதப்பட்;ட இப்பாடலின் 4 சரணங்களையும் சகோதரர் மைக்கேல் ஒரே நாளில் இயற்றி முடித்தார். இப்பாடலின் ராகத்தையும் அவரே அமைத்தார். அடுத்த ஞாயிறே, மைக்கேலின் ஆர்மோனியப் பின்னிசையுடன் ஞாயிறு பள்ளியில் இப்பாடல் அரங்கேற்றமானது. இந்த உற்சாகப் பாடலின் மூலம், பிள்ளைகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை அறிந்து கொண்டனர்.

பின்னர்IEHC-ன் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் மிஷனரிகள் இப்பாடலைப் பாடினர். 1974-ம் ஆண்டு IEHC நாகர்கோவில் பகுதிகளில் தங்கள் நற்செய்திப் பணியைச் செய்து வந்தனர். அக்குழுவில் IEHC-ன் முக்கிய பாடகரான சகொதரர் டி.தேவ பிச்சை முன்னோடி மிஷனரியாக இருந்தார். அந்த ஆண்டின் CSI திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களின் பாடல் பொறுப்பாளர் புதுப்பாடல்களைத் தேடி தேவபிச்சையிடம் வந்தார். சகோதரர் தேவபிச்சை அவருக்குப் பாடிக்காட்டிய பாடல்களில் இப்பாடலும் ஒன்று. இப்பாடலைத் தெரிந்தெடுத்து திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களில் பாடினர்.

பின்னர் 1975-ம் ஆண்டு, ஆசீர்வாத இளைஞர் இயக்க பிளெஸ்ஸோ முகாமிலும் இப்பாடல் பாடப்பட்டு பிரபலமானது. இதற்கு திருச்சி இசைவல்லுரனராக திரு. கூலிங் இசை அமைத்து, பிரபல பாடகியான திருமதி பாரதி பாடலைப் பாடவைத்து, பதிவு செய்து, இசைத் தட்டில் வெளியிட்டார். இதின் மூலம் இப்பாடல் பலருக்கும் அறிமுகமானது.

இப்பாடலின் வார்த்தைகளை ஆராய்ந்த நிபுணர்கள், “நானோ பரலோகத்தில்’ என்ற வரி சுய நல நோக்கை வெளிப்படு;த்துகிறது,’’ எனக் கருத்துத் தெரிவித்தனர். பாடலைக் கேட்பவரின் ஆசையைத் து}ண்டி, அவர்களையும் இவ்வரிக்கு உரிமையாளர்களாக மாற்றுவதே தன் எண்ணமாயிருந்தது, என சகோதரர் மைக்கேல் தெளிவுபடுத்துகிறார்.

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
...................................

தென்னிந்தியச் திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டல மிஷனரிப் பணித்தளமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலை விளங்குகிறது. இப்பணித்தளத்தின் ஊழிய தரிசனத்தை முதலாவது பெற்றவர், “கொல்லிமலை மிஷனரி” என அழைக்கப்படும் ஆங்கிலேய மிஷனரி, ஜெசிமன் பிராண்ட் ஆவார். இவர் குஷ்டரோகிகளுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த, உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையும், வேலூர் சி.எம்.சி ( C.M.C) மருத்துவ மனையின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் பால் பிராண்டின் தந்தையாவார்.

தமிழைக் கற்று, கொல்லிமலை ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஜெசிமனுக்குப் பிடித்த பாடல், தன் தாய்மொழியான ஆங்கிலத்திலல்ல. தமிழில் உள்ள “தேவபிதா” என்ற இப்பாடலே. தனது 43- வது வயதிலேயே, அவர் கொல்லி மலையின் விஷக்காய்ச்சலால் மரித்தபோது, அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய இப்பாடலையே, அவரது அடக்க ஆராதனையில், அம்மலை மக்கள் பாடினார்கள்.

இவ்வாறு, வெளிநாட்டுத் தேவ ஊழியர்களையும் கவர்ந்த இப்பாடல், கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இன்றும், இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் மிஷனரிப் பணிகளில், பல ஆதிவாசி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படும் முதல் பாடலாக, இப்பாடல் விளங்குகிறது. தமிழகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளில், மிகச் சிறந்ததாக இப்பாடல் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட புகழ்பெற்ற இப்பாடலை எழுதியவர், நெய்யூரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார்.

தன் இளமைப் பருவத்திலேயே தன் உடன் பிறந்தோரையும், தன் தந்தையையும் இழந்த அவர், பின்னர் தன் தாயையும் இழந்து அனாதையானார். இந்நிலையில், தன் பரம பிதாவையே நம்பி வாழ்ந்த யோசேப்பு, அவரை உரிமையோடு, “தேவபிதா” என அழைத்து, இப்பாடலை எழுதியிருக்கிறார்.

இப்பாடலின் முக்கியத்துவம் என்னவெனில், இதின் அடிப்படையான 23-ம் சங்கீதம், பலவித சூழ்நிலைகளிலும் உபயோகிக்கப்படுவது போல, இப்பாடலும், திருமணம் போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளில், தேவ அருளைப் பெற வேண்டிப் பாடுவதற்கும், துயருற்றுக் கலங்கிநிற்கும் வேளைகளிலும், அருமையானவர்களை இழந்து தவிக்கும் வேளைகளிலும் ஆறுதல் பெறப் பாடுவதற்கும் ஏற்ற தகுதி நிறைந்ததாக விளங்குகிறது.

எனவே, இப்பாடல், பலதரப்பட்ட மக்களும், பற்பல மொழிகளில், இவ்வுலக வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், நிகழ்ச்சிகளிலும், விரும்பிப் பாடும் சிறப்புப் பாடலாகத் தனிச்சிறப்புப் பெற்றிருக்கிறது.



துதித்துப்பாடிட பாத்திரமே...


துதித்துப்பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
.............

இந்தப் பிரபல பாடலை எழுதி, ராகமும் அமைத்து, பல இடங்களில் ஆண்டவரை உற்சாகமாயத் துதித்துப் பாடிவரும் சகோதரி சாராள் நவரோஜியை, கிறிஸ்தவ சமுதாயமனைத்தும் நன்கு அறியும். கடந்த 40 ஆண்டுகளாக, இசைவழி இறைப்பணி செய்துவரும் இச்சகோதரியின் மூலம் கிறிஸ்தவ உலகிற்கு தேவன் அருளிய பாடல்களின் எண்ணிக்கை 361 ஆகும்.

சகோதரி சாராள் நவரோஜி 60 ஆண்டுகளுக்கு முன் ஊழிய வாஞ்சை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்தார். இவரது தந்தை திரு சாலமோன் ஆசீர்வாதம் ஒரு கர்நாடக இசை மேதையாவார். அவரது முன்னோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். மதுரை அழகர் கோவிலில் பாடல்களைப் பாடிவந்தவர்கள். திரு. சாலமோன், சாது சுந்தர்சிங்கின் மூலம் நற்செய்தியை அறிந்து, ஆண்டவரை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், கர்நாடக இசையில் ஆண்டவரைத் துதித்துப் பல பாடல்களை இயற்றிப் பாடினார். லுத்தரன் திருச்சபை நாட்டையர்களுக்குப் பாடக் கற்றுக் கொடுத்தார். சகோதரியின் தாயார் திருமதி. சவுந்தரம் அம்மையார் 1924-ம் ஆண்டுமுதல், வெளிநாட்டு மிஷனரிச்சகோதரிகளுடன் சேர்ந்து, தென்னகத்தில் சிறுவர் ஊழியத்தை ஆரம்பித்து நடத்திய முன்னோடிச் சிறுவர் மிஷனரியாவார்.

இத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சகோதரி சாராள், லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர். பின்னர், தனது 14-வது வயதில், பிரதரன் அசெம்பிளி நடத்திய நற்செய்திக் கூட்டத்தி;ல் இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். தனது 18-வது வயதிலே, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றார். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, 1956-ஆம் ஆண்டு முதல், பாடல்களை இயற்றி, ராகமமைத்துப் பாடி, இசைத் தொண்டாற்றி வருகிறார்.

சென்னை மின்சார வாரியத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த நாட்களில், சகோதரி சாராள், ஆண்டவரின் அழைப்பைப் பெற்றார். எனவே, 1959-ம் ஆண்டு, தனது இருபதாவது வயதில், முழுநேரப் பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். 1959 முதல் 1962 வரை இலங்கையில் வேதாகமத்தில் பயிற்சி பெற்று, ஊழியம் செய்தார். பின்னர் தமிழகம் திரும்பி, திருச்சபைகளைச் சந்தித்து, உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்தி, ஆவியில் அனல் மூட்டினார். சென்னையில், சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கிய சபையை ஸ்தாபித்து, தேவ பணியை அருகிலும், தூரத்திலும் உள்ள கிராமங்களில் தொடர்ந்து உத்தமமாய்ச் செய்து வருகிறார்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்...


சருவ லோகாதிபா, நமஸ்காரம்! சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்! தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம்.
….

இந்த அருமையான துதிப் பாடலை எழுதிய அருள் திரு. வேதமாணிக்கம், 1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.

வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்@ இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது.

ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பட பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார்.

தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்கிகளில் பாட, “சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்,” என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.

ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன.

1917-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-5-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப காலமல்லோ,” “ஜீவ வசனம் கூறுவோம்,” என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்ததனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்...

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்


இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது.
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார். கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி " நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் " என் எச்சரித்தான்.
அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த மனிதன் ஒரு பாடலை இசைத்துப் பாடினார்,
" இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை)
I have decided to follow Jesus
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்"
No trning back No turuning back

இதனால் கடுங்கோபமுற்ற அந்தக் கிராமத்தலைவன் அந்தக் கிறிஸ்தவனின் இரு பையன்களையும் கொல்லுமாறு தன் வில்வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அந்த இரு சிறுவர்களும் வில் அம்பினால் குத்தப்பட்டு கீழே விழுந்து கிடக்கையில்,அந்த கிராமத்தலைவன் அக்கிறிஸ்தவனை நோக்கி," இப்போதாவது நீ உன் விசுவாசத்தை விட்டு விட மாட்டாயா? பார் உன் இரு பையன்களும் நீ இழந்து விட்டாய். நீ உன் விசுவாசத்தை விட்டு விலகா விட்டால் நீ உன் மனைவியையும் இழந்து விடுவாய்" என கர்ஜித்தான்.அப்போது அந்த மனிதன்,

யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை)
Though no one joins me still i will follow
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
No turning back No turning back
என்று பாடினார்.

கடுங்கோபமுற்ற கிராமத்தலைவன் அவனுடைய மனைவியையும் கொல்ல உத்தரவிட்டான். ஒரு சில நிமிடங்களில் அவனுடைய மனைவியும் தன் இரு பிள்ளைகளைச் சாவில் சந்தித்தாள். கடைசியாக அந்த கிராமத்தலைவன், " நீ உயிர் பிழைப்பதற்கு ஒரு கடைசி தருணம் தருகிறேன், இப்போது இந்த உலகத்தில் உனக்கென்று யாருமே இல்லை. என்ன சொல்கிறாய்?" என்று வினவினான்.
அந்த கிறிஸ்தவ மனிதன் காலத்தால் அழியாத கடைசி கவியைப் பாடினான்:
"சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
The Cross before me The World behind me
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
No turning back No turning back

இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம், நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லாரும் நினைத்தனர். ஆனால் அந்த மனிதனின் மரணம் ஒரு துவக்கமே. பரிசுத்த ஆவியானவர் அங்குள்ளவர்களின் மனதில் கிரியை செய்தார். இந்த மனிதன்,அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் 2000 வருடங்களுக்கு முன் வேறொரு தேசத்தில் வாழ்ந்து மரித்த ஒரு மனிதனுக்காக ஏன் மரிக்கவேண்டும்?" என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட அந்தக் கிராமத்தலைவன், " அந்தக் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத சக்தி இருந்திருக்க வேண்டும். நானும் அந்த அற்புதத்தை பெற விரும்புகிறேன்" என்று தன் மனதில் நினைத்தான்.

உடனடியாக தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட அந்த கிராமத்தலைவன், " நானும் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் தான்" என்று கூறினான். தங்கள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த கிராமத்தவர்கள் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.


இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்